18 Aug 2021

டைப் செய்யாமல் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்புவது எப்படி? ஈஸி டிப்ஸ்.. உடனே ட்ரை செய்யுங்கள்..

 

வாட்ஸ்அப் மெசேஜ்ஜிங் தளத்தை உலகம் முழுக்க பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் என்று சொன்னதும் ஏராளமானோருக்கு நமது கைகளில் உள்ள விரல்கள் டிஸ்பிளே எழுத்துக்களை வேகமாகத் தேடி தட்டுவது தான் நினைவிற்கு வரும். இப்படி வேகமாக உங்கள் டிஸ்பிளேவில் உள்ள எழுத்துக்களை தேடி டைப் செய்யாமல், நீங்கள் சொல்ல விரும்பும் குறுகிய செய்தியை வாட்ஸ்அப் வழியாக அனுப்ப ஒரு வழி உள்ளது. அதைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.



டைப் செய்யாமல் வாட்ஸ்அப் இல் மெசேஜ் அனுப்ப முடியுமா?

வாட்ஸ்அப் பயனர்கள் அவர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் பயன்பாட்டில் இருந்து டைப் செய்யாமல் எப்படி ஒரு சில முக்கிய குறுஞ்செய்திகளை எளிதாக அனுப்ப முடியும் என்பதைப் பார்க்கலாம். உண்மையில் இப்படிச் செய்ய வாய்ப்புள்ளதா? டைப் செய்யாமல் வாட்ஸ்அப் காண்டக்ட்டில் இருக்கும் நபர்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியுமா? என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கும். அதற்கு வாய்ப்புள்ளது என்பதே உண்மை.

டிஜிட்டல் அசிஸ்டன்ட் உதவி தேவையா?

இதைச் சாத்தியப்படுத்த உங்கள் ஸ்மார்ட்போன் சாதனத்தில் டிஜிட்டல் அஸிஸ்டண்ட்களின் உதவி உங்களுக்குத் தேவைப்படும். உங்கள் சாதனத்தில் உள்ள விர்ச்சுவல் அஸிஸ்டண்ட்டை வாட்ஸ்அப் மூலமாக மெசேஜ் அனுப்ப கட்டளையிடுவதன் மூலம் இந்த செயல்பாட்டை நீங்கள் எளிமையாகச் செய்து முடிக்க முடியும். எந்த டிஜிட்டல் அசிஸ்டன்ட் இந்த வேலையைச் செய்து முடிக்க போதுமானது என்பதை முதலில் பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு இந்த அசிஸ்டன்ட் தான் சிறந்தது

நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர் என்றால், நிச்சயமாக உங்களுக்கு கூகிள் நிறுவனத்தின் கூகிள் அசிஸ்டண்ட் தான் இந்த வேலையை சரியாகச் செய்து முடிக்க உதவும் ஆப்ஸாக இருக்கப் போகிறது. அதேபோல், நீங்கள் ஒரு ஆப்பிள் ஐபோன் பயனர் என்றால் உங்களுக்கு நிச்சயமாகச் சிரி அசிஸ்டன்ட் உதவி தான் சிறந்தது. இந்த இரண்டு அசிஸ்டன்ட்களின் உதவியுடன் நீங்கள் வாட்ஸ்அப்பில் இருந்து டைப் செய்யாமல் மெசேஜ்களை அனுப்ப முடியும்.

ஸ்மார்ட்போன் அசிஸ்டன்ட்டிற்கு அனுமதி வழங்க வேண்டுமா?

நீங்கள் பிஸியாக இருக்கும்போது அல்லது ஒரு மெசேஜ்ஜை டைப் செய்ய முடியாத நிலையில் இருக்கும்போது, உங்களின் அசிஸ்டன்ட் உதவியை நீங்கள் நாடலாம். ஆனால், இதைச் சரியாகச் செய்ய உங்கள் போனில் இருக்கும் கூகிள் அசிஸ்டன்ட் அல்லது சிரி அசிஸ்டன்ட்டிற்கு நீங்கள் ஒரு சில அனுமதிகளை வழங்கி இருக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள். இதைச் சரியாகச் செய்ய உங்கள் ஸ்மார்ட்போனின் மேசேஜ்கள், காலண்டர் நிகழ்வுகள் மற்றும் பிற தகவல்களுக்கான அனுமதியை நீங்கள் வழங்க வேண்டும்.



"ஹே கூகுள்" அல்லது "ஓகே கூகுள்" சொல்ல மறக்காதீர்கள்

இந்த அனுமதியை வழங்கிய பின் இனி ​​நீங்கள் சுலபமாக டைப் செய்யாமல் வாட்ஸ்அப்பில் இருந்து உங்கள் வாட்ஸ்அப் காண்டக்ட்டில் இருக்கும் பயனர்களுக்கு மெசேஜ்களை அனுப்ப முடியும். இதை செய்ய நீங்கள் உங்களின் கூகிள் அஸிஸ்டண்ட்டை 'ஹே கூகுள்' அல்லது 'ஓகே கூகுள்' என்று கூறி அதை அழைக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் போனில் உள்ள அசிஸ்டன்ட் உங்களுக்கான தேவையை நிறைவேற்ற இயங்கப்படும். சில ஸ்மார்ட்போன்களில் கூகிள் அசிஸ்டன்ட் இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது. இல்லாதவர்கள் இவற்றை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஸ்மார்ட்போனில் டைப் செய்யாமல் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்புவது எப்படி?

  • முதலில், 'ஹே கூகுள்' அல்லது 'ஓகே கூகுள்' என்று கூறி உங்கள் கூகிள் அசிஸ்டன்ட்டை உதவிக்கு அழைக்க வேண்டும்.
  • சத்தம்போட்டு அழைக்க விரும்பாதவர்கள் Google அசிஸ்டண்ட்டை செயல்படுத்த முகப்பு பட்டனை லாங் ப்ரெஸ் செய்து அழுத்தவும்.
  • கூகிள் அசிஸ்டன்ட் ஓபன் ஆனவுடன் 'ஹே கூகிள்' என்று சொல்லவும்.
  • பிறகு, Try Saying என்று உங்கள் டிஸ்பிளேவில் டிஜிட்டல் அஸிஸ்டண்ட் தகவலைக் காண்பிக்கும்.

''சென்ட் வாட்ஸ்அப் மெசேஜ்'' சொல்ல மறக்காதீர்கள்

  • இப்போது, நீங்கள் மெசேஜ் அனுப்ப விரும்பும் உங்களின் வாட்ஸ்அப் காண்டாக்ட் பெயரை குறிப்பிட்டு 'சென்ட் வாட்ஸ்அப் மெசேஜ்'' என்று கூறுங்கள்.
  • நீங்கள் மெசேஜ் அனுப்ப விரும்பும் பயனரின் பெயரைச் சரியாகக் குறிப்பிட வேண்டும்.
  • ஒரே பெயரில் இரண்டு அல்லது அதற்கு மேலான காண்டாக்ட் பெயர்கள் உங்கள் வாட்ஸ்அப் இல் இருந்தால் கூகிள் அஸ்சிஸ்டனட் எந்த சரியான நபர் என்ற விருப்பத்தைக் காண்பிக்கும்.

இதை செய்தால் போதுமானது

  • மீண்டும் 'ஹே கூகுள்' அல்லது 'ஓகே கூகுள்' என்று கூறி அந்த நபரின் பெயரைச் சரியாக உச்சரித்துச் சொல்லுங்கள்.
  • அடுத்து நீங்கள் அனுப்ப விரும்பும் மெசேஜ்ஜில் என்ன குறிப்பிடப்பட வேண்டும் என்று கூகிள் அஸிஸ்டண்ட் கேட்கும்.
  • நீங்கள் கூறும் மெசேஜ்ஜை கூகிள் அஸிஸ்டண்ட் டைப் செய்து காண்பிக்கும்.
  • மெசேஜ் அனுப்பத் தயாராக இருப்பதாக அஸிஸ்டண்ட் உங்களுக்குத் தெரியப்படுத்தும்.
  • அதன் பின் ஓகே சென்ட் என்று நீங்கள் சொன்ன உடன், நீங்கள் அனுப்ப விரும்பிய மெசேஜ் அந்த நபருக்கு அனுப்பப்படும்.



முக்கிய குறிப்பு: சிக்கல் ஏற்பட்டால் ஓகே கூகுள் சொல்லுங்கள்

  • முக்கிய குறிப்பு, ஒவ்வொரு முறையும் நீங்கள் சொல்ல வரும் விஷயங்கள் 'ஹே கூகுள்' அல்லது 'ஓகே கூகுள்' என்ற வார்த்தைகளுடன் சொல்வது சிறந்தது.
  • இது உங்கள் கட்டளைகளைக் கூகிள் அசிஸ்டன்ட் சரியாகக் கைப்பற்ற உதவும்.

இந்த செயல்முறையை சரியாக பின்பற்றினால் நீங்கள் அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் மெசேஜ்ஜை நீங்கள் டைப் செய்யாமல் அனுப்ப முடியும்.
Share:

FACEBOOK